மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமீரகத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய துறைமுகங்கள் இனி ஈரானின் "நியாயமான இலக்குகள்" (Legitimate Targets) என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜசீரா (Al Jazeera) செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் கார் (Kharg) தீவு மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமீரகத்திலுள்ள அமெரிக்கப் படைகளின் பதுங்குமிடங்கள் மற்றும் கப்பல் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களிலுள்ள துறைமுகங்கள் மற்றும் அமெரிக்க இராணுவப் பகுதிகளை விட்டுப் பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.
ட்ரம்பின் அறிக்கை மற்றும் கள நிலவரம்
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தோல்வியடைந்துவிட்டதாகத் தனது 'Truth Social' பக்கத்தில் பதிவிட்டுள்ள போதிலும், ஈரானின் இந்த அதிரடி அறிக்கை வளைகுடா நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இறையாண்மையைப் பாதுகாக்க இத்தகைய தாக்குதல்கள் அவசியமென IRGC குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான ஏவுகணைத் தாக்குதலும் இப்பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
