ஈரானிய யுத்தத்தில் வெற்றி பெறுவதாக ட்ரம்ப் உரிமை கோரல் !!!

Author
0
ஈரானிய யுத்தத்தில் வெற்றி பெறுவதாக ட்ரம்ப் உரிமை கோரல்: தெளிவான 'வெளியேறும் திட்டம்' இல்லையென சர்வதேச நாடுகள் கவலை!
அமெரிக்கா - ஈரானிய யுத்தம் ஆரம்பமாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், கள யதார்த்தம் மற்றும் யுத்தத்தின் இறுதி இலக்கு குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் சரிந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு மத்தியில், இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தெளிவான 'வெளியேறும் திட்டம்' (Exit Strategy) வெள்ளை மாளிகையிடம் இல்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேசக் கூட்டாளிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
மாறிவரும் யுத்த இலக்குகளும் காலக்கெடுவும்
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது "ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்" என முழங்கிய அதிபர் ட்ரம்ப், தற்போது ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்றுக்கொள்வது போன்ற மென்மையான தொனியில் பேசத் தொடங்கியுள்ளார்.
யுத்தத்தின் தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், "இது யுத்தத்தின் ஆரம்பமா, நடுப்பகுதியா அல்லது முடிவா என்பதை அதிபர் ட்ரம்ப்பே தீர்மானிப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தெளிவற்ற அறிக்கைகள், 12 நாட்களைக் கடந்து நீடித்து வரும் இந்த மோதல் ஒரு முடிவற்ற திசையை நோக்கிச் செல்கின்றதோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார முடக்கம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை
அமெரிக்கப் படைகள் ஈரானியக் கடற்படையை முற்றுமுழுதாக அழித்துள்ளதாகக் கூறினாலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியான ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் நிறுத்தப்படாத வரை, ஒரு லீற்றர் எரிபொருளைக் கூட குறித்த கடல் வழியாகச் செல்ல அனுமதிக்கப்போவதில்லை என ஈரானியப் புரட்சிகரக் காவல் படை சூளுரைத்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "ட்ரம்பின் வெற்று மிரட்டல்களுக்கு ஈரானிய மக்கள் அஞ்சப்போவதில்லை; எங்களை அழிக்க நினைப்பவர்கள் தாமே அழிந்து போவார்கள்" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
உள்நாட்டு எதிர்ப்பு மற்றும் சர்வதேசக் கூட்டாளிகளின் அதிருப்தி
யுத்தத்தைத் தொடங்கியதன் மூலம் அமெரிக்கா தற்போது பாதுகாப்பு அற்ற நாடாக மாறியுள்ளதாக 50 சதவீதமான அமெரிக்க மக்கள் கருத்துக்கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். மேலும், ட்ரம்பின் முடிவுகளை 60 சதவீதமான மக்கள் நம்பத் தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்பின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், யேர்மனிய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், "இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டுத் திட்டம் ஏதும் அமெரிக்காவிடம் இல்லை என்பது கவலையளிக்கின்றது" எனத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைத் தாக்குதலும் ஏவுகணை சர்ச்சையும்
யுத்தத்தின் முதல் நாளில் தெற்கு ஈரானில் உள்ள பெண் பிள்ளைகள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165 பேர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலை ஈரான் மீது சுமத்த அதிபர் ட்ரம்ப் முயற்சித்த போதும், அமெரிக்காவின் 'டோமாஹாக்' (Tomahawk) ஏவுகணையே அங்கு வீழ்ந்து வெடித்ததாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானிடம் டோமாஹாக் ஏவுகணைகள் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தவறான தகவலை வெளியிட்டமை குறித்து அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "உண்மை என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசுவது ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு அழகல்ல" என எதிர்க்கட்சித் தலைவர்கள் சாடியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top