ஈரானின் நிலத்தடி அரண்களைத் துளைத்த அமெரிக்கா: 5,000 இறாத்தல் குண்டுகளை வீசி ஏவுகணைத் தளங்கள் அழிப்பு - CENTCOM அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் கப்பல்-எதிர்ப்பு குரூஸ் ஏவுகணைத் தளங்கள் (Anti-ship cruise missiles) மீது அமெரிக்கப் படைகள் பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்திக்கு (Strait of Hormuz) அருகாமையில் அமைந்துள்ள ஈரானின் கடலோரப் பகுதிகளில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப்பகமான 'சென்ட்காம்' (CENTCOM) தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில், "சில மணிநேரங்களுக்கு முன்னர், ஈரானின் அதிபாதுகாப்பான ஏவுகணைத் தளங்கள் மீது பல 5,000 இறாத்தல் எடையுடைய ஊடுருவித் தாக்கும் குண்டுகளை (Deep penetrator munitions) அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளன. சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு இந்தத் தளங்களில் உள்ள ஏவுகணைகள் பெரும் அபாயத்தை ஏற்படுத்தியிருந்தன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ மறுத்த சில மணிநேரங்களிலேயே, ட்ரம்ப் நிர்வாகம் தனது இராணுவப் பலத்தை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த அதிபயங்கரமான 'பங்கர் பஸ்டர்' (Bunker Buster) குண்டுகளை ஈரானின் நிலத்தடித் தளங்கள் மீது வீசியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
