208 ஈரானிய கடற்படையினர் மீட்பு; போர்க்கப்பலை திருகோணமலைக்கு மாற்ற ஜனாதிபதி அநுர உத்தரவு!
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமை
யில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழலில் மற்றுமொரு ஈரானியக் கப்பலில் இருந்த 208 கடற்படை வீரர்களை இலங்கை கடற்படை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்ப்பாப்பான மீட்பு நடவடிக்கை
நேற்று இடம்பெற்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் ஏவுகணைத் தாக்குதலில் ஈரானியப் பிரிகேட் ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்விபரீதச் சூழலில், குறித்த பகுதிக்கு அருகாமையில் தரித்து நின்ற இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்ட இலங்கைக் கடற்படை, அந்த இரண்டாவது கப்பலில் இருந்த 208 பணியாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கியுள்ளது.
இவ்விவகாரம் குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், குறித்த ஈரானியப் போர்க்கப்பலை இலங்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு, இந்தக் கப்பல் இலங்கையின் வடக்குக் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை இயற்கை துறைமுகத்திற்கு பாதுகாப்பிற்காக (Safekeeping) நகர்த்தப்படவுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, "இலங்கைக் கடல் எல்லையில் மோதல்கள் தீவிரமடைவதைத் தவிர்க்கவும், கடலில் தத்தளித்த வீரர்களின் உயிர்களைக் காக்கவும் இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான நேரடி மோதலில் இலங்கை மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே தலையிடுவதாக அரசாங்கத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆழமான கடற்பகுதியைக் கொண்ட திருகோணமலைத் துறைமுகத்திற்கு ஈரானியப் போர்க்கப்பல் நகர்த்தப்படுகின்றமையானது, சர்வதேச ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இலங்கையின் இந்த அதிரடித் தீர்மானம் மற்றும் திருகோணமலையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
