இன்று (28) மேல், சப்ரகமுவ, வடமத்திய, தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும்.
எனவே, அதிக வெப்பமான நேரங்களில் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40–50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற அசைவின் காரணமாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 7 வரை இலங்கையின் சில அகலாங்குகளுக்கு நேரடியாக மேலே சூரியன் காணப்படும்.
அதன்படி, இன்று பிற்பகல் 12.11 மணியளவில் கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50–60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
சில கடற்பரப்புகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படலாம்.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2–3 மீற்றர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடலில் பயணம் செய்வோர், மீனவ சமூகத்தினர் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
