ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் கிராமத்தில் பவானி ஆற்றங்கரை ஒட்டி வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தில் நேற்று காலை முதல் மரக்கிளையில் இருந்து வெள்ளை நிறத்தில் பால் சுரந்து சொட்டு சொட்டாக கீழே விழுந்து கொண்டே இருக்கிறது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வேப்பமரத்தில் பால் வடிவதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.எனினும் இதையடுத்து வேப்ப மரத்தின் அடிப்பகுதியில் சுத்தம் செய்து மரத்தை தண்ணீர் ஊற்றி கழுவி மஞ்சள் துணி சுற்றி, பூ, குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அத்தோடு வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை பாத்திரத்தில் பிடித்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர். வேப்பமரத்தில் பால் வடியும் செய்தி காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.
இதையடுத்து பவானிசாகர் சுற்று வட்டார பகுதிகளான பசுவ பாளையம், அய்யன்சாலை, எரங்காட்டூர், ராஜநகர் போன்ற பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பால் வடியும் வேப்ப மரத்திற்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.அத்தோடு இன்றும் அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்து வருவதால் மக்கள் பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.