அமைச்சரின் வீட்டுக்குச் சென்றது ஏன் பொலிஸார் விளக்கம்..!!

tubetamil
0

 தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அமைச்சரை ஏன் வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கவில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ விளக்கம் அளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்றைய தினம்  கருத்து தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ, விசாரணைகள் இடம்பெற்று வருவதால், கெஹலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அப்போது தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

“சிஐடியிடம் போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் ஒரு நபரை விசாரணைக்கு அழைப்பார்கள். எவ்வாறாயினும், அமைச்சர் ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்குமூலமொன்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும், போதிய சாட்சியங்களை தன்னால் வழங்க முடியும் என்றும், அதிகாரிகளை தனது இல்லத்திற்கு வருமாறும் கோரியிருந்தார். 

இதன் அடிப்படையில் அமைச்சரின் இல்லத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்திருந்தனர்” என்று அவர் தெளிவுபடுத்தினார். 

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற இம்யூனோ குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இரண்டு மூத்த அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி, ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முதலில் விசாரணை தொடங்கப்பட்டது. 

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் ரூ.50 கோடி நிதி மோசடி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபாய் வருமானம் ஏற்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளின் போது, ​​மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான 'அருண தீப்தி' என அழைக்கப்படும் சுதத் ஜானக பெர்னாண்டோ தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் விஜித் குணசேகர மற்றும் சுகாதார அமைச்சின் வழங்கல் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க ஆகியோர் போலியான அமைச்சு ஆவணங்களை வழங்கி இறக்குமதிக்கு உதவியதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த குழு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது, பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக சந்திரகுப்தாவும் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த உட்பட ஐந்து சந்தேக நபர்களை 2024 ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top