தற்போது 54 வயதாகும் (Sheryl Sandberg) 2008லிருந்து 2022 வரை மெட்டா தலைமை இயக்க அதிகாரியாக பணிபுரிந்தார். அதற்கு பிறகு நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக பொறுப்பேற்று நிறுவனத்தை வழிநடத்தினார்.
வரும் மே மாதம், மெட்டா நிர்வாக இயக்குனர்கள் குழுவில் ஷெரிலின் பதவிக் காலம் நிறைவடைகிறது.
இந்நிலையில், ஷெரில் மெட்டா நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தனது ஃபேஸ்புக் பதிவில் இது குறித்து ஷெரில், "வர்த்தக ரீதியாக மெட்டா சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படும். எனவே, இது பிறருக்கு வழி விட சரியான தருணம். மெட்டாவிற்கு ஆலோசனை கூற எப்போதும் தயாராக உள்ளேன். ஜுகர்பர்கிற்கும் பிற நிர்வாக இயக்குனர்களுக்கும் நன்றி" என பதிவிட்டார்.
ஷெரில் முடிவிற்கு மெட்டா நிறுவனர், மார்க் ஜுகர்பர்க் (Mark Zuckerberg) "ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்நோக்குகிறோம்" என பதிலளித்தார்.
அதாவது சுமார் 12 வருட காலம் மெட்டா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஷெரில், தலைமை இயக்க அதிகாரி பொறுப்பில் 14 வருட காலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்டா நிறுவனத்திற்கு அடுத்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்றிருந்த ஷெரில், ஃபேஸ்புக்கில் விளம்பர வருவாயை ஊக்குவிக்கும் தற்போதைய வடிவமைப்பை கொண்டு வந்தவர். ஃபேஸ்புக் தள உள்ளடக்கத்தில் பல சர்ச்சைக்குரிய சிக்கல்கள் எழுந்த போது அவற்றை சரி செய்து நிறுவன நற்பெயரை காப்பாற்ற பல முடிவுகளை எடுத்தவர்.
அத்தோடு ஷெரில் சாண்ட்பர்கின் நிகர சொத்து மதிப்பு, சுமார் $1.9 பில்லியன் என்கிறது பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.