போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன.
அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. எனினும் அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் சமூகவலைத்தளங்கள் மற்றும் சுவர் போஸ்டர்கள் மூலம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடு வாங்கினால் மனைவி இலவசமா? என அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதாவது தங்கள் முயற்சியில் வீடு வாங்கி உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.