நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு கிராம அலுவலர்களுக்கு உண்டு..!!

tubetamil
0

 “அரசாங்க சேவை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பில் நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்” என, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (12) நடைபெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர் நியமனம் வழங்கும் நிகழ்விலேயே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“கிராம உத்தியோகத்தர்களுக்கு உள்ள பொறுப்புகளை பெரும்பாலான அரசாங்க உத்தியோகத்தர்கள் மறந்து விடுகின்றனர்.

அரசாங்க அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் மறந்து விடுகிறார்கள். எமது நாடு, வரலாறு, வளர்ச்சியடைந்தது போலவே, நாடு பாதுகாக்கப்பட்டதும் கிராமத்திலிருந்து ஆரம்பித்த கிராமிய ஆட்சி முறைமையினாலாகும்.

அப்போது எங்களிடம் விமானப்படை இருக்கவில்லை என்ற போதும், எமது நான்கு எல்லைகளையும் பாதுகாக்கக்கூடிய பாதுகாப்பு அமைப்புகளை எமது மன்னர்கள் உருவாக்கினர். அதற்கெல்லாம் பலமாக இருந்தவர்கள் எமது கிராமியத் தலைவர்கள்.

அந்தத் தலைவர்கள் தான் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க பலமாக இருந்தனர். அத்தகைய தலைமையால் கட்டியெழுப்பப்பட்ட நாடு தன்னிறைவை நோக்கி நகர்ந்து உணவு மற்றும் கலாசாரத்தில் இன்றும் உலகையே ஆச்சரியப்படுத்தும் நிலையை உருவாக்கியது.

அப்போது கிராம சேவை அலுவலகத்தில் வசதிகள் மிகவும் குறைவு. முன்பு டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லை. முழு கிராம சேவையையும் முறையாக மாற்றும் திறன் கொண்ட தகவல் தொழில்நுட்பத்தை உங்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அது பற்றிய தீர்மானங்கள் எட்டப்பட்டதும், மேலும் சேவைகளை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் மற்றும் உயர்தரமான அரசாங்க நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை அதிகரிக்கும்.

பொதுச் சேவை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பில் நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்” எனத் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top