காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் பதில் 135 நாட்களில் போரை முடிக்க பரிந்துரை..!!

tubetamil
0


 காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஹமாஸ் அமைப்பு பதிலளித்துள்ள நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான வேறுபாடுகளை களைவதில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் இராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாரிசில் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பரிந்துரைக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை பரிசீலித்த ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் (06) அதற்கான பதிலை அளித்ததாக குறிப்பிட்டது.

இதில் ஹமாஸின் பதில் தொடர்பான விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “நீடித்த மற்றும் முழுமையான போர் நிறுத்தம், எங்கள் மக்கள் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருதல், நிவாரணம், தங்குமிடம் மற்றும் புனரமைப்பை உறுதி செய்தல், காசா முற்றுகையை நீக்குதல் மற்றும் கைதிகள் பரிமாற்றம் ஒன்றை அடைவதை உறுதி செய்யும் வகையில் சாதகமான பதில் ஒன்று அளிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இராணுவத்தினர் அல்லாத சில பணயக் கைதிகளை விடுவித்து கைதிகள் பரிமாற்றம் மற்றும் காசாவுக்கு உதவிகளை விநியோகிக்கும் வகையில் 45 நாள் போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் பரிந்துரைத்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முன்மொழிவின் இரண்டாவது கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையான பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேலிய ஆண் பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முழுமையாக வாபஸ் பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஹமாஸின் பதில் முன்மொழிவு ஒவ்வொன்றும் 45 நாட்கள் நீடிக்கும் மூன்று கட்டங்களை கொண்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 135 நாட்களுக்குள் அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டு காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்பட்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமையும்.

ஹமாஸின் இந்த பதில் முன்மொழிவு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அதனை இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் மதிப்பீடு செய்து வருவதாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று (07) அறிவித்தது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் போர் வெடித்த பின் ஐந்தாவது முறையாக மத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருப்பதோடு, நேற்று அவர் இஸ்ரேலை சென்றடைந்தார். ஹமாஸின் பதில் குறித்து இஸ்ரேல் அதிகாரிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கட்டார் சென்ற அவர், “இன்னும் வேலைகள் உள்ளன என்றாலும் உடன்படிக்கை ஒன்று சாத்தியம் என்றும் அது அவசியம் என்றும் நாம் தொடர்ந்து நம்புகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹமாஸின் பதிவை கட்டார் “சாதகமானது” என்று விபரித்திருப்பதோடு, ஹமாஸ் நெகிழ்வுத் தன்மையை காண்பித்திருப்பதாக எகிப்து பாதுகாப்பு தரப்பினர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

“முடியுமான விரைவில் இறுதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் முன்மொழியப்பட்ட கட்டமைப்பின் அனைத்து விபரங்கள் தொடர்பிலும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று எகிப்து தகவல் சேவையின் தலைவர் தியா ரஷ்வான் தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் பதில் உடன்படிக்கை ஒன்றை நோக்கி “நகர்வதாக உள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். எனினும் உடன்படிக்கை ஒன்றை எட்டும் பொருட்டு ஹமாஸ் அல்லது இஸ்ரேல் தனது கடுமையான நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செயற்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெறும் வரை தமது பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காது என்று அந்த அமைப்பின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செவ்வாயன்று (06) செய்தி வெளியிட்டிருந்தது.

முறுபுறம் ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்படும் வரை காசாவில் போர் நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என்று தொடர்ந்து கூறி வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவதையும் நிராகரித்து வருகிறார்.

ரபாவை நெருங்கும் போர்

எனினும் காசா போர் நான்கு மாதங்களை தாண்டி நீடிப்பதோடு இஸ்ரேலியப் படை தற்போது எகிப்து எல்லையை ஒட்டி ரபா பகுதி மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இது பெரும் எண்ணிக்கையான மக்கள் அடைக்கலம் பெற்றுவரும் அந்த சிறிய நகரை நோக்கி இஸ்ரேலியப் படை முன்னேறும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றுக் காலை இந்த நகர் மீது சரமாரி தாக்கதல்களை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக பொலிஸ் சின்னத்துடன் சென்ற கார் வண்டி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.

ரபாவின் கைர்பாத் அல் அதாஸ் பகுதிக்கு மாவு கொண்டு செல்லும் உதவி லொறிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த பொலிஸ் வண்டி சென்றதாக பார்த்தவர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமாக ரபாவில் தற்போது 1.4 மில்லியன் பலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்தப் பகுதி முன்னர் இஸ்ரேலிய இராணுவத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இஸ்ரேலியப் படை தற்போது இந்த நகரை நோக்கி முன்னேற தயாராகி வருவதாக அஞ்சப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாகக் கூடும் என்று உதவிப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேநேரம் வடக்கு காசாவின் ஜபலிய அகதி முகாமில் இஸ்ரேலி நடத்திய தாக்குதல்களில் இருபது பொதுமக்கள் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்ததாக வபா கூறியது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள ஹனாவி பாடசாலையை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நான்கு மாதங்களை தாண்டியுள்ள காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

காசாவில் 11,000க்கும் அதிகமான நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உயிரை காப்பதற்கு வெளிநாட்டில் அவசர சிகிச்சை வழங்கப்பட வேண்டி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் வழியாக நடத்தி வரும் தாக்குதல்களில் சுமார் 70,000 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் சிலர் மாத்திரமே எகிப்துடனான ரபா எல்லை கடவை வழியாக காசாவில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈராக் ஆதரவு போராட்டக் குழுக்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பதோடு அமெரிக்காவின் பதில் தாக்குதல்கள் வன்முறையை அதிகரித்துள்ளது.

மத்திய சிரிய நகரான ஹோம்ஸில் இஸ்ரேல் நேற்று (07) நடத்திய வான் தாக்குதல்களில் ஆறு பொதுமக்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் ஒன்றில் கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டிருப்பதோடு ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து மேலும் பல இடங்களில் தாக்தல்கள் இடம்பெற்றிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்துல் ரஹ்மா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top