காசாவில் போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் துருப்புகளை வடக்கிற்கு நகர்த்தும் இஸ்ரேல்..!!

tubetamil
0

 காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய உடன்படிக்கையை நோக்கி சர்வதேச மத்தியஸ்தர்கள் முன்னேறி வரும் நிலையில் இஸ்ரேலிய இராணுவம் தனது படைகளின் ஒரு பகுதியை காசாவில் இருந்து பதற்றம் நீடிக்கும் லெபனான் எல்லைக்கு நகர்த்துவதற்கு தயாராகி வருகிறது.

ஏற்கனவே காசா மக்கள் பெரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், பலஸ்தீன அகதி நிறுவனத்திற்கான நிதியை நிறுத்திய நன்கொடை நாடுகளை ஐ.நா தலைவர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த அகதி நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் இஸ்ரேல் மீதான ஒக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்தே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட சில நாடுகள் அந்த நிறுவனத்திற்கான நிதியை இடைநிறுத்தியது.

பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்திருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் ஜோர்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்கத் துருப்புகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா சூளுரைத்துள்ளது.

இஸ்ரேலிய தரைப்படை ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதோடு, அங்குள்ள அல் அமல் மருத்துவமனையைச் சூழ பீரங்கி தாக்குதல்கள் உக்கிரமடைந்திருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சின்வாரின் அலுவலகம், இராணுவத் தளங்கள் மற்றும் ரொக்கெட் தயாரிப்பு வசதி ஒன்றில் துருப்புகள் தேடுதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேலிய இராணுவம் கடந்த திங்கட்கிழமை இரவு தொடக்கம் நடத்திய தாக்குதல்களில் 128 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இதில் கிழக்கு ரபாவில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நெருக்கமாக உள்ள குடியிருப்பு வீடு ஒன்றின் மீது நேற்று முன்தினம் இரவு வான் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் வீடு தரைமட்டமாக்கப்பட்டு பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை படிப்படியாக விரிவுபடுத்தப்படுவது பற்றி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் காசா நகரின் சப்ரா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானம் ஒன்று வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் சுமார் நான்கு மாதங்களாக நீடிக்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 26,751 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 65,636 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவத்தது.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், காசாவில் உள்ள சில படைப்பிரிவுகள் வடக்குக்கு நகர்த்தப்படுவதாகவும் அங்கு வரவிருப்பதற்கு தயாராவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் ஹிஸ்புல்லா போராளிகளுடன் தினசரி மோதல் நீடிக்கும் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையையே குறிப்பிட்டிருந்தார்.

போர் நிறுத்தப் பேச்சு

காசாவில் புதிய போர் நிறுத்த முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் வில்லியம் பர்ன்் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல், எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகளை பாரிஸ் நகரில் சந்தித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, இந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவை ஹமாஸிடம் கொண்டு சென்று அவர்களை சாதகமான மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் ஈடுபடுத்தவும் இந்தத் தரப்புகள் முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், உடன்படிக்கை ஒன்று தொடர்பில் நம்பிக்கை தெரிவித்தார்.

“மிக முக்கிய, ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உண்மையான எதிர்பார்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று பாரிஸ் பேச்சுவார்த்தையை அடுத்து பிளிங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதில் காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதுடன் முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் செல்வது உட்பட நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் கட்டமைப்பு தொடர்பில் பாரிஸில் விவாதிக்கப்பட்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு தற்காலிகமானதன்றி முழுமையான மற்றும் விரிவான போர் நிறுத்தம் ஒன்றையே விரும்புவதாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி டஹர் அல் நூநூ தெரிவித்துள்ளார். எனினும் காட்டாரின் முன்மொழிவுகள் ஹமாஸிடம் கிடைத்திருப்பது தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை.

பாரிஸ் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டபோதும் இன்னும் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பதாகவும் தரப்புகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top