பிரான்சில் பக்னோல்ஸ்-சர்-செஸ் (Bagnols-sur-Ceze) பகுதியில் மத பணிகளில் ஈடுபட்டு வந்தவர் இமாம் மஹ்ஜோப் மஹ்ஜோபி (Mahjoub Mahjoubi). துனிசியா (Tunisia) நாட்டை சேர்ந்த மஹ்ஜோபி 38 வருடங்களுக்கு முன்பே பிரான்சில் குடியேறியவர்.
மஹ்ஜோபி ஒரு சமூக வலைப்பதிவில் பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியை "சாத்தான்" என பொருள்பட பேசி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.
பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பதிவு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மஹ்ஜோபியை நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை உத்தரவிட்டது.
மஹ்ஜோபி வெளியிட்டுள்ள கருத்துகள் பிரெஞ்சு குடியரசின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ளதாகவும், பெண்களுக்கு எதிராகவும், தவறான சிந்தனைகளை ஊக்குவித்து யூத மக்களுக்கு பதட்டத்தை உண்டாக்கும் வகையில் உள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்தது.
ஆனால், மஹ்ஜோபி தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தனக்கு தேசிய கொடியை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
"கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் மஜ்ஜோபி பிரெஞ்சு எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டார். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நாட்டிற்கு எதிரானவர்கள் எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம்" என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் (Gerald Darmanin) கூறினார்.
இந்நிலையில், துனிசியா தலைநகர் துனிஸ் (Tunis) செல்லும் விமானத்தில் அவர் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அத்தோடு வெளிநாடுகளிலிருந்து பிரான்சிற்கு வந்து வாழ்பவர்களை அந்நாடு வெளியேற்ற விரும்பினால், உடனடியாக செயல்படுத்தும் வகையில் அந்நாட்டு குடியுரிமை சட்டங்களில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.