தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை அமைச்சரிடம்..!!

tubetamil
0

 இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கையில் அடையாளம் காணப்பட்ட ஆரம்ப கட்ட தகவல்கள் இன்று (15) மாலை தமக்கு கிடைத்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தாம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த தடயவியல் விசாரணையை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, சர்வதேச கணக்காய்வு நிறுவனமான KPMG மற்றும் இலங்கை எண்ணெய் சேமிப்பு முனையத்தின் உள்ளக கணக்காய்வு திணைக்களம் ஆகியவற்றால் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது.

அதன்படி, 2010 ஆம் ஆண்டு முதல் 13 இலட்சம் தரவுகள் பிரதான கணினி பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர், 2023ஆம் ஆண்டுக்குள் தரவுகளை நீக்குவது அல்லது திருத்துவது குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு எரிபொருள் இருப்புக்களை பராமரித்தல் மற்றும் சேமித்து வைப்பதில் ஏற்பட்ட இழப்பாக 28 பில்லியன் ரூபா பதிவாகியுள்ளதாகவும் அது 2023 ஆம் ஆண்டளவில் 4 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பழைய சுற்றறிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் செயற்பாடுகள் நடைபெறுவதும் போதுமான தரவுகள் மற்றும் தகவல்கள் இல்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

முழுமையான ஆய்வு அறிக்கை வரும் வாரத்தில் KPMG ஆல் வழங்கப்படவுள்ளது.

பின்னர் அதனை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கவும், தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த அறிக்கை அமைச்சரவை, பாராளுமன்றம், கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top