ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் பலி
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற இன்று (27.03) மாலை விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் இருந்து கடமை முடிந்து வவுனியா நோக்கி பயணித்த பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் வாகனம் வவுனியா, ஓமந்தை, கள்ளிக்குளம் சந்தியை கடந்து பயணித்த போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது டிப்பர் வாகனத்திற்கு முன்னே அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியும் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
இவ் விபத்தில் வைத்தியர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன், அதனைச் செலுத்திச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரான வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளரும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன் அவர்களே மரணமடைந்தவராவார்.
இதேவேளை, விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தின் சாரதி ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.