தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்..!!

tubetamil
0

 முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (27.03.2024) புதன்கிழமை கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.


முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவ தளபதி முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இராணுவ படை தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார். அவரிடம் தமது சொந்த காணிகளை விடுவித்து தருமாறு கோரி மகஜர் கையளிக்க 
குறித்த இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும் இராணுவ தளபதியை தற்போது சந்திக்க முடியாதெனவும் இன்று (27.03.2024) மாலை 3 மணியளவில் 5 நபர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொண்டு தருவதாகவும் இராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த கவனயீர்ப்பினை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி  பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (25.03.2024) கேப்பாபிலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபிலவு  மக்கள் தெரிவித்திருந்தனர்.

கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது..

குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்திருந்த நிலையிலே இன்றையதினம் கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top