இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் என்றும் சூளுரைத்தார்.1967 இஸ்ரேல் – அரபு யுத்தத்தின் போது சுயஸ் கால்வாய் மூடப்பட்டதன் காரணமாக 10 வருடங்களாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்நாட்டு துறைமுகங்களின் பெறுமதியை பேணுவதற்காக சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
திருகோணமலை கடற்படை முகாமில் இன்று (01) இடம்பெற்ற இலங்கை கடற்படையின் விசேட கப்பல் படையணிக்கு ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்குச் சொந்தமான கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டின் கடல்சார் இலக்குகளை நனவாக்குவதற்காக அர்ப்பணிக்கும் இலங்கை கடற்படையின் சிறப்புக் கப்பல் படையணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்ணங்கள் வழங்கினார்.
கடற்படையின் விசேட கப்பல் படையணியின் கப்பல்களால் கடல் பரப்பில் நிகழ்த்தப்பட்ட சாகசங்களும் நிகழ்வை வண்ணமயமாக்கியது.
இதன்போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அதனையடுத்து கடற்படை முகாமின் பதிவேட்டில் ஜனாதிபதி குறிப்பொன்றையும் பதிவுசெய்தார்.
வர்ணங்கள் வழங்கும் நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”கடற்படையின் சிறப்பு கப்பல் படையணிக்கு இன்று மிகவும் முக்கியமான நாள். இப் படையணிக்கு இன்று ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன. கடற்படையின் விசேட கப்பல் படையணி ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த படை 1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இராணுவத்தில் இரண்டு சிறப்பு சேவைப் பிரிவுகள் உள்ளதால், கடற்படையிலும் இதுபோன்ற படையணிகளை ஆரம்பிக்கத் தீர்மானித்திருந்தோம். கடற்படைத் தளபதிகள் தேசிய பாதுகாப்பு சபையில் நீண்ட காலமாக இது குறித்து கலந்தாலோசித்தனர்.
எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில் கடற்படையின் தந்திரோபாய முயற்சிகளில் ஒன்றாக இந்தப் படையணியைக் கூறலாம். எனவே, இந்தப் படையணி ஆற்றிய சேவையை நான் விவரமாக நினைவுகூரத் தேவையில்லை. இருப்பினும் அவர்களின் சேவைக்கு நன்றி கூறுகிறேன்.
அத்தோடு நின்றுவிடாமல் குறித்த படையணி இலங்கை கடற்படையின் முக்கிய பிரிவாக கௌரவிப்புக்கும் வரவேற்புக்கும் பாத்திரமாகியுள்ளமை சிறம்பசமாகும்.
எனவே, ஜனாதிபதி வர்ணத்தைப் பெற்ற பின்னர் மேலும் வலுவான முறையில் பணிகளை முன்னெடுத்து இந்தப் படையணியின் நற்பெயரைப் பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன், இறுதி யுத்தத்தின் போது இலங்கை கடற்படையினர் நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றியது. உயிர்த் தியாகம் செய்தவர்கள் மற்றும் இழக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான குறிப்புக்கள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. அதேபோல் வரலாற்றுக் காலத்திலிருந்தே இலங்கை கடல் பிராந்தியத்தினதும், இந்து சமுத்திரத்தினதும் பாதுகாப்பிற்காக கடற்படை அர்பணித்துள்ளது. அது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையையும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்து சமுத்திரத்திற்குள் நமது பொருளாதாரத் திட்டங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளியோம்.
மேலும், செங்கடலின் பாதுகாப்பிற்காக நமது கடற்படையை ஈடுபடுத்த தீர்மானித்தோம். 1967 இஸ்ரேல் – அரபு போரின் போது சுயஸ் கால்வாய் மூடப்பட்டதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் 10 வருடங்களாக கொழும்பு துறைமுகத்தின் பணிகள் நிறுத்தப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.
அதனால் இந்து சமுத்திரம், சுயஸ் கால்வாய் , செங்கடலின் பாதுகாப்பிற்குமான ஒத்துழைப்புக்களை வழங்கி, நமது துறைமுகங்களின் பொருளாதார மதிப்பைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகும். மேலும், எதிர்காலத்தில் நமது கடற்படை இந்த பணியில் வெற்றிகரமாக செயற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்று இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நடைபெறுகிறது. திருகோணமலை துறைமுகமானது இலங்கையில் மாத்திரமன்றி உலகிலேயே பிரதான துறைமுகமாக கருதப்படுகிறது. அனுராதபுரம் – பொலன்னறுவை காலங்களில் இத்துறைமுகம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது ஆசிய பிராந்தியத்தில் ஆங்கிலேயரின் வெற்றிக்கு இந்த துறைமுகமும் வழிவகுத்தது. எமது நாட்டிற்குச் சொந்தமான இந்தத் துறைமுகத்தைப் பாதுகாக்க வேண்டும். இதன்போது நாம் மத்தியஸ்தமாக செயற்பட வேண்டியதும் அவசியமாகும். இன்று முப்படைகளின் தளபதி என்ற வகையில் கடற்படை சிறப்பு கப்பல் படையணியைக் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக கடற்படையினருக்கும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றும் சேவைக்காகவும் நன்றி தெரிவிகிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா, கடற்படை விசேட கப்பல் படையணியின் தளபதி தர்மசிறி ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளும் கடற்படைச் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.