இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மீண்டும் யாழில் போராட்டம்..!

keerthi
0


இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

யாழில் இன்றையதினம்(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 23 ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொதுச் சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றதையடுத்து எதிர்வரும் ஐந்தாம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்தியாவிலிருந்து வருகின்ற படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு எமது அரசாங்கத்தால் முடியாது அத்தோடு இந்திய அரசாங்கம் நடித்துக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றமை எங்களுக்கு தெரிந்த விடயம்.

வடபுலத்திலே வாழுகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகவே துன்பத்தையே தமது வாழ்க்கையாக வாழ்ந்து, பல சவால்கள் மத்தியிலே உயிர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டமைக்கு முக்கியமான காரணம் போராக இருந்தாலும் அடுத்ததாக இங்கே பூதாகரமாக புரையோடிக் கிடக்கின்ற இந்த இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய வருகையும் அவர்களுடைய அடாவடித்தனமான சட்ட விரோதமான தொழில்முறையுமே காரணமாக இருக்கின்றது.

இதன் மூலமாக அவர்கள் எங்களுடைய கடல் வளங்களை அழித்துச் செல்வதனுடன் வாழ்வாதாரத்தை சூறையாடியும் கடற்தொழில் உபகரணங்களை அடுத்து நாசமாக்கிவிட்டும் செல்கின்றார்கள்.

அன்று நடந்த பேச்சுவார்த்தையில் “நீங்கள் உங்களது எல்லைக்குள் மீன் பிடிக்காமல் ஏன் எங்களது எல்லைக்குள் வருகின்றீர்கள்" என கேட்டபோது எங்களது எல்லையில் மீன்கள் இல்லையெனவும் வளங்கள் அழிந்துவிட்டன எனவும் அதனால்தான் இங்கே வருகின்றோம் என சொல்கின்றார்கள்.

ஆனால் அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக சென்னை பட்டினத்தில் இருந்து வெளிநாட்டுக்கு மீன்களை அனுப்புகின்றார்கள், அது எங்கே பிடிக்கப்பட்ட மீன் ? எங்களுடைய வளங்களை அள்ளிக் கொண்டு சென்று நீங்கள் வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு அங்கிருந்து வருகின்ற அந்நியச் செலாவணியை எடுத்து உங்களுக்கு மட்டுமல்ல நாடு முழுவதற்கும் கொடுத்துவிட்டு இப்பொழுது நாங்கள் எங்களுடைய வலைகள் அறுந்துவிட்டது என்று ஆதங்கப்பட்டு இப்படி செய்தவர்களது படகுகளை எரித்து அடித்து துரத்த வேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசினால் நீங்கள் கோபப்படுகிறீர்கள்.

அறுக்கப்பட்டவர்கள் அழுகின்றோம் காரணம் இருக்கிறது ஆனால் அறுத்துவிட்டு போன நீங்கள் கோபப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கின்றது ? ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் உங்களது படகுகள் வந்து எங்களது வளங்களை அள்ளிச் செல்வதோடு சாதாரணமாக ஒரு பத்தாயிரம் அல்லது முப்பதாயிரம் இந்திய ரூபாய்க்கு ஒரு படகில் வந்து மீனை பிடித்தால் இந்த முப்பதாயிரம் ரூபா இலங்கை காசுக்கு ஏறக்குறைய ஒன்றேகால் இலட்சத்துக்கு மேலே வரும்.

அந்தவகையில் ஒரு படகு ஒரு வருடத்திற்கு 60 கோடிக்கு அதிகமான மீனை பிடித்துக் கொண்டு போகின்றதானால் இதை உங்களது 2500 படகினால் பெருக்கிப் பாத்தால் எத்தனை ஆயிரம் கோடியை நீங்கள் கொண்டு போகிறீர்கள் என்று.

ஏறக்குறைய 1987 ஆம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு 40 வருட காலமாக எங்களது கடலை வாரி செல்கின்றீர்கள் அத்தோடு எத்தனை ஆயிரம் கோடிகளை கொண்டு போய் விட்டீர்கள் இருப்பினும் எமது அகதிகளுக்கு வரிப்பணத்தில் கொடுப்பதாக கொக்கரிக்கின்றீர்கள் ஆனால் எங்களது கடலை எங்களிடம் விடுங்கள் நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வருவாயில் அகதிகளுக்கு காசு அனுப்புகின்றோம்.

கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தை ஆக்கபூர்வமான ஒரு உணர்ச்சி பூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் இலங்கையிலுள்ள பல அமைப்புகள் அனைத்து கடல் தொழிலாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அதிலே முழுமையாக பங்குபற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top