காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் கெய்ரோவில் புதிய பேச்சு ஆரம்பம்..!!

tubetamil
0

 காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நேற்று (31) எகிப்து தலைநகர் கெய்ரோவில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

பல மருத்துவமனைகள் உட்பட முற்றுகையில் இருக்கும் காசாவின் பல இடங்களிலும் நேற்று (31) உக்கிர மோதல்கள் இடம்பெற்றதோடு இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன.


காசா நகரின் தென்கிழக்கில் உள்ள குவைட் சுற்றுவட்டப்பாதையில் உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நேற்று முன்தினம் (30) மீண்டும் ஒருமுறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த குவைட் சுற்றுவட்டப்பாதையில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் பல முறை தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் இதனை ஒரு ‘மரணப் பொறி’ என்று பலஸ்தீனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் உணவு மற்றும் அடிப்படை பொருட்கள் இல்லாத நிலையில் உயிராபத்துக்கு மத்தியிலும் மக்கள் அந்தப் பகுதியில் உதவி லொறிகள் வரும் வரை கூடியிருப்பதாக அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தியாளர் விபரித்துள்ளார்.

காசாவில் தரை வழியாக உதவிகள் செல்வதை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து முடக்கி வரும் நிலையில், அங்கு பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் நெருங்கி இருப்பதாக ஐ.நா மற்றும் உதவி அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

இந்நிலையில் பல நாடுகளும் வானில் இருந்து உதவிகளை போட்டு வருவதோடு மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரசில் இருந்து 400 தொன் உதவிப் பொருட்களை சுமந்த இரண்டாவது கப்பல் காசாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

தெற்கு நகரான கான் யூனிஸ் மற்றும் காசா நகரின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 13 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. இதில் கான் யூனிஸின் பானி சுஹைலா சிறு நகரின் பொதுமக்கள் குழு ஒன்றின் மீது இடம்பெற்ற இஸ்ரேலின் செல் வீச்சில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மஜதி குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் ஒருவர் மற்றும் அவரது குழந்தை கொல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை முற்றுகை

காசாவின் பெரும்பகுதி வெறும் இடிபாடுகளாக மாறியிருக்கும் சூழலில் அங்குள்ள பல மருத்துவமனைகளைச் சூழ கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்த மருத்துவமனைகளில் பலஸ்தீன போராளிகள் மறைந்திருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் அதனை அவர்கள் மறுத்து வருகின்றனர்.

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையில் கடந்த 13 நாட்களுக்கு மோலாக இஸ்ரேல் நடத்தும் முற்றுகையில் 400க்கும் அதிகமான நோயாளிகள், போரினால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்துவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மருத்துவமனைக்குள் தொடர்ந்து 107 நோயாளர்கள் இருப்பதாகவும் இவர்களில் 30 அங்கவீனமுற்றவர்கள் அடங்குவதாகவும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களை வெளியேற்றும் முயற்சியை இஸ்ரேல் இராணுவம் தடுத்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள நாசிர் மற்றும் அல் அமல் ஆகிய இரு மருத்துவமனைகளிலும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

போருக்கு முன்னர் 36 மருத்துவமனைகள் இருந்த காசாவில் தற்போது குறைந்த பட்சம் இயங்கக் கூடிய வெறும் 10 மருத்துவமனைகளே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் புற்றுநோய் சிகிச்சை, குண்டு தாக்குதல்களில் காயம் அடைந்தவர்கள், சிறுநீரக சிகிச்சை மற்றும் ஏனைய நாட்பட்ட நோய் பாதிப்புகள் உட்பட உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைக்காக காசாவில் இருந்து சுமார் 9000 நோயாளர்கள் வெளியேற்றப்பட வேண்டி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் பாரிய ஆர்ப்பாட்டம்

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே காசாவில் போர் வெடித்தது. இதில் பலஸ்தீன போராளிகளால் கடத்தப்பட்ட சுமார் 250 பணயக்கைதிகளில் தொடர்ந்து 130 பேர் காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தப் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு இஸ்ரேலுக்குள் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் டொஹா மற்றும் கெய்ரோவில் இடம்பெற்று வரும் புதிய சுற்று போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு நெதன்யாகு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்திருந்தார்.

இதனையோட்டி கெய்ரோவில் நேற்று புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாக எகிப்து உளவுப் பிரிவுடன் நெருக்கமான அல் கஹ்ரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் காசாவில் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் தற்காலி போர் நிறுத்தம் ஒன்றுக்கு முயன்று வருவதோடு, இஸ்ரேலிய துருப்புகளை வாபஸ்பெறச் செய்து காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த ஹமாஸ் அமைப்பு முயற்சிக்கும் நிலையில் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பணயக்கைதிகளின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர்களை விடுவிக்கக் கோரி கடந்த சனிக்கிழமை இரவு டெல் அவிவ் நகரில் பாரிய பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். இவர்கள் தீ வைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைகளை முடக்கிய நிலையில் நீர்ப்பீச்சி அடிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான ஹமாஸ் பிடியில் இருந்து தப்பிய ராஸ் பென் அமி என்பவர், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தையாளர்கள் உடன்பாடு ஒன்றை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

‘ஆண் மற்றும் பெண் பணயக்கைதிகளுக்காகவும் இஸ்ரேலிய மக்களுக்காகவும் காட்டாரில் உள்ள பேச்சுவார்த்தையாளர்கள் உடன்பாடு ஒன்று இல்லாமல் திரும்ப வேண்டாம் என்று பிரதமர் உத்தரவிட வேண்டும்’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

நெதன்யாகுவின் வாசஸ்தலம் மற்றும் இஸ்ரேலின் ஏனைய நகரங்களிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா முயற்சித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் எட்டப்பட்ட போர் நிறுத்தம் ஒரு வாரம் மாத்திரமே நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று ஆரம்பமான கெய்ரோ பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதிநிதிகளை அனுப்பியபோதும் ஹமாஸ் தனது பிரதிநிதிகளை அனுப்புவதற்கு முன்னர் இஸ்ரேலுடனான மத்தியஸ்தர்களின் பேச்சுவார்த்தையின் முடிவுகளுக்கு காத்திருப்பதாக அந்த அமைப்பை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top