ரஷ்யாவின் முக்கியமான வேளாண் பகுதிகளில் ஒன்றான குர்ஸ்க் பிராந்தியம் மீது உக்ரைன் முன்னெடுத்த அதிரடி தாக்குதல் காரணமாக ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்டு 6ம் திகதி மேற்கத்திய நாடுகளே எதிர்பாராத நிலையில், உக்ரைன் படைகள் அதிரடியாக ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியது. ஆனால் பலம் பொருந்திய ரஷ்யாவால் அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தோல்வி இதுவென்றும் நிபுணர்கள் தரப்பால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் முதன்மையான வேளாண் பிராந்தியங்களில் ஒன்றான குர்ஸ்க் பகுதி உக்ரைன் வசம் சிக்கியதை அடுத்து, அதன் சேதங்கள் தொடர்பில் மதிப்பிடப்பட்டுள்ளது.
குர்ஸ்க் பிராந்திய ஆளுநர் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உக்ரைன் படைகளுக்கு பயந்து குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து 150,000க்கும் மேலான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள், ட்ரோன் மற்றும் கனரக ஆயுதங்களுடன் ஆயிரக்கணக்கான உக்ரைன் ராணுவம் திடீரென்று குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியது. முக்கியமான இரு பாலங்களை மொத்தமாக தகர்த்தது.
இந்த சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை மீண்டும் உக்ரைன் பக்கம் திருப்பியது. குர்ஸ்க் பிராந்தியமானது ரஷ்யாவின் முதன்மையான தானிய உற்பத்தியை முன்னெடுக்கும் பகுதிகளில் ஒன்று.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் மொத்த தானிய உற்பத்தியில் 4 சதவீதம் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 160,000 ஹெக்டேர் பரப்பளவில் தானியங்களின் அறுவடையை முடிக்க முடியவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், 500,000 மெட்ரிக் டன் அளவுள்ள எண்ணெய்வித்து பயிர்களும், 700,000 டன் சர்க்கரைவள்ளிக்கிழங்குகளும் சேதப்படுத்தப்பட்டன அல்லது ரஷ்யாவிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் 300,000 டன்களுக்கும் அதிகமான தானியங்கள் தற்போது உக்ரேனியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள கிடங்குகளில் உள்ளதாக ஆளுநகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரஷ்ய துருப்புகள் குர்ஸ்க் பிராந்தியத்தில் பதிலடியை தொடங்கியுள்ளதாக ரஷ்ய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.