நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் ஒவ்வொரு தமிழர்களும் வேதனைப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "இந்த நாட்டின் எதிர்காலம் என்பது நாட்டின் தலைவரின் வழிகாட்டலில் உள்ளது. இன்று எமது மக்களுக்குக் காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரச காணிகள் அவர்களுக்கு முழு உரிமையுள்ள உறுதிப்பத்திரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
வீடுகளின் உரிமைகளும் சொந்த வீடுகளாக வழங்கப்பட்டுள்ளன. இவை எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும். எமக்கு இரண்டு வருடங்கள் சேவை செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து இன்னும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால், நாம் உரிமையுடனும் நெஞ்சை நிமிர்த்தியும் அவர்களிடம் எமது மக்களுக்கான தேவைகளைக் கேட்க முடியும்.
வெறும் வெட்டிப்பேச்சுக்காக தேவையற்ற தேசிய வாதத்தைப் பேசிக்கொண்டு எமது இருப்பைப் பாதுகாக்கக் கூடிய சூழலை இழந்து விடுகின்றோம். ஒருவர் எதிர்காலத்தில் என்ன செய்வார் என்பதை விட நிகழ்காலத்தில் என்ன செய்தார் என்பதே முக்கியம்” என்றார்.