வடக்கு கொழும்பு போதனா (ராகம) வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மகன்களால் தாக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையின் வைத்தியரும் தாதியும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் தொடர்பான நோயினால் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 22ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் நேற்று (24) உயிரிழந்துள்ளார்.
சூரியபாலுவ கடவட பிரதேசத்தில் வசித்து வந்த உயிரிழந்தவரின் மகன்கள் நேற்று காலை ராகம வைத்தியசாலையின் 22 ஆம் விடுதிக்கு வந்து தாயின் மரணம் தொடர்பில் ஊழியர்களுடன் முரண்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், உயிரிழந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கவில்லை எனவும் மகன்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மோதலில் தாக்கப்பட்டு காயமடைந்த வைத்தியர் மற்றும் தாதி ஒருவரும் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் ராகம வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி ராகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தாக்கப்பட்ட நபர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.