வடக்கு - கிழக்கு பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு பதில் வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும். தொடர்ந்து காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இதற்கு பதில் வழங்க வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்க நான் தயாராக இருக்கின்றேன். நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன்.
நான் ஜனாதிபதியானால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவேன். உள்ளூராட்சி மன்றத்தேர்தலையும் உடனடியாக நடத்துவேன்.
வரலாற்றில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிய எவரும் உரிய நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச முதன் முதலாக வடக்கில் தேர்தலை நடத்தினார்.
வடக்கில் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான் தெற்கிலும் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே நாம் இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே கோணத்தில் ஆராய வேண்டும். இவற்றுக்கு இரண்டு தீர்வுகள் இல்லை. ஒரே தீர்வு தான் இருக்கின்றது.
தெற்கில் இளைஞர்களுக்கு கிடைக்கின்ற சகல உரிமைகளும் சந்தர்ப்பங்களும் வடக்கில், கிழக்கில் இருக்கின்ற இளைஞர்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றேன். பொய் வாக்குறுதிகளை வழங்க முடியாது. புதிய தலைவரான என்னிடம் புதிய விடங்களை மக்கள் எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.