அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப்பும் இருவரும் போட்டியிடுகின்றனர். கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
மேலும் தேர்தலில் தோற்றுவிட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ட்ரம்பும் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்க அண்மையில் இரு வேட்பாளர்களும் தொலைக்காட்சியொன்றில் நேரடி விவாதத்திலும் கலந்துகொண்டனர். இரு தரப்பினருமே தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் பென்சில்வேனியா மாநிலத்தில் இன்று திங்கட்கிழமை தனது பிரச்சாரத்தை தொடங்கிய ட்ரம்ப், “அமெரிக்காவில் குற்றங்கள் அதிகமாகி வருவதாகவும் பொலிஸார் கடுமையான அடக்குமுறைகளைக் கையில் எடுத்து இதனை ஒடுக்க வேண்டும்“ எனவும் வலியுறுத்தினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வின்கான்சின் மாநிலத்தில் செய்த பிரச்சாரத்தில், “புலம்பெயர்ந்தோரினால் வன்முறை மற்றும் பிற குற்றங்கள் அதிகரித்துவிட்டன. இதனால் அமெரிக்க சிதைந்து வருகிறது. பல்வேறு விடயங்களில் ஜோ பைடனின் ஆட்சி தோல்வி கண்டுவிட்டது. சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்காவிட்டால் கமலா ஹாரிஸால் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறினார். மேலும் ஜோ பைடனைப் போலவே கமலா ஹாரிஸூம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இவ்வாறிருக்க லொஸ் வேகாசில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய கமலா ஹாரிஸ், “நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பிரச்சினைகள் குறித்து பேசிவிட்டு, டொனால்ட் ட்ரம்ப் இதற்கு தீர்வு காண மாட்டார். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது குடியேற்ற அமைப்பை சீர்செய்ய ஒன்றும் செய்யவில்லை” என பதிலடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.