தாய்லாந்தை போல இலங்கையிலும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயுர்வேத சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லயில் இன்று முற்பகல் நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள்.
இது இந்தியாவில் செயற்படுகிறது. அந்த முறையை நாமும் பின்பற்ற வேண்டும். நமது சுதேசவைத்திய முறையின் அறிவியல் அடிப்படையைக் கண்டறிந்து செயற்படுவது மிகவும் முக்கியம்.
அதற்காக ஆராய்ச்சிகள் அவசியம். மேலும், சுற்றுலாத்துறைக்காக இத்துறை, நவீனமயமாக்கப்பட்டு பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம்.
இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும். எனவே, சுற்றுலாத் துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது.
இன்று சென்னை போன்ற நகரங்களில் ஜோதிட முறையும் உருவாகியுள்ளது. இந்த மரபுகள் அனைத்தையும் இணைத்து இந்தத் துறையை நாம் முன்னேற்ற வேண்டும்.
எனவே ஆயுர்வேத தேசிய சபையை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து எங்களுக்கு ஆலோசனை தேவை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இந்த சபையை நிறுவுவது அவசியமாகும்" என்றார்.