இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், பொதுமக்கள் மத்தியில் நிலவிய குழப்ப நிலையைத் தவிர்த்திருக்கலாம் என்று ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
அமைதியான, வெளிப்படையான மற்றும் நம்பகமான ஜனாதிபதி தேர்தலை நடத்தியதற்காக இலங்கை தேர்தல் ஆணையகம் மற்றும் அதன் வாக்குச்சாவடி பணியாளர்களை பாராட்டிய சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் அமைப்பான ANFREL இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்குகள் காரணமாக இரண்டாவது முறை எண்ணப்பட்டமை இதுவே முதல் முறை என்றும், எனவேதான் குறித்த சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக விருப்புத்தெரிவு எண்ணலின்போது, தமது கட்சி முகவர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி முறையிட்டிருந்தமை தொடர்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு தேர்தல்கள் ஆணையகம் பதிலையும் வழங்கியிருந்தது.