இலங்கையில் பதின்ம வயது பாடசாலை மாணவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து ஏமாற்றும் மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மாணவர்களை பயமுறுத்தி தகாத புகைப்படங்களை பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
பல்வேறு பயிற்சி வகுப்புகளின் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் மாணவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் தகாத புகைப்படங்களை இணைத்து மாணவர்களை அச்சுறுத்துவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை இவ்வாறான ஆபத்தான நபர்கள் பதிவிறக்கம் செய்து, அந்த புகைப்படங்களை எடிட் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட புகைப்படங்களை உரிமையாளருக்கு அனுப்பி, அந்த புகைப்படம் தவறான இணையதளங்களில் விநியோகிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
அவர்களை பயமுறுத்துவதுடன், அதை அகற்ற விரும்பினால், இதுபோன்ற புகைப்படங்களை அகற்றும் சேவை மூலம் செய்யலாம் எனவும் அவர்களுக்குத் தெரிவித்து, தாங்கள் கூறுவதை போன்று செயல்பட அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.