அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
புதிய வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், தேர்தல் திகதி தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.