தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள வழங்குவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு (CEFAP) கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் 06ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
எனினும், தற்போது அனுமதி பத்திரம் பெற்ற நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவும், உரிமம் பெற்ற அனைவருக்கும் அறிவிக்க போதிய கால அவகாசம் இன்மையாலும் இதற்கான காலக்கெடுவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், நீடிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அனுமதி பெற்ற அனைத்து உரிமையாளர்களுக்கும் எழுத்துமூலமாக முறையாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.