கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் ஒரு வருடத்திற்கும் மேலானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் சுமார் 66 சடலங்களை வைப்பதற்கான வசதிகள் உள்ளன.
அவற்றில் 40 சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாதவை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைகளில் வைப்பதிலும், பிரேத பரிசோதனைக்காக கொண்டு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சில உடல்கள் எந்த வகையிலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவடைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த சடலங்களை அகற்றும் முறையிலுள்ள குறைபாடுகள் காரணமாக, சிதைவடைந்த சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.