வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்
அத்துடன் விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இவர்கள் தெலிஜ்ஜவில கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், காலி பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ரயிலுக்கான சமிஞ்ஞை ஒளிரும் வேளையில் ரயில் வருவதாக அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததையும் மீறி லொறி ரயில் கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியின் சாரதியான 34 வயதான நபரும் அவரது 80 வயதான தாத்தாவுமே உயிரிழந்தனர் விபத்தில் காயமடைந்த உயிரிழந்த சாரதியின் 01 மற்றும் 07 வயதுடைய இரு பிள்ளைகள், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் தாயார் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
34 வயதான மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதே வேளை மோட்டார் சைக்கிள் ஒன்று, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உதயதேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) பிற்பகல் ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை பெல்லங்கடவல கிளை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கினிஹிரிகம, கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது