தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் தரம் 12 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் தவணை பொது அறிவு பரீட்சை வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மத்துகமையில் செயற்பட்டு வரும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மத்திய கல்லூரியிலேயே குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, அந்த வினாத்தாளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் செயல்திறன் மற்றும் அதன் நியமனங்கள் தொடர்பான ஐந்து கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளமையே இந்த சர்ச்சைக்கான காரணமாகும்.
இந்த சர்ச்சைக்குரிய பரீட்சைத்தாள், குறித்த பாடசாலையால் தயாரிக்கப்பட்டது என்றும், அதை தயாரிப்பதில் அமைச்சகமோ அல்லது எந்த துணை நிறுவனங்களோ ஈடுபடவில்லை என்றும் கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனையடுத்து, அது தொடர்பில் உடனடியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளத்துடன் அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.