பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் நேற்று (25) இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்ட பேரணியில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் போராட்டக்காரர்களால் ஒரு பொலிசார் சுட்டு கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 4 இராணுவ வீரர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தப் பேரணியில் பலர் காயமடைந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு கடந்த நவ.20 ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்தில், தீவிரவாதம் மற்றும் இதர வழக்குகளில் இம்ரான் கானை ராவல்பிண்டி போலீஸார் கைது செய்தனர். ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் இம்ரான் கான் இருந்தபோது, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இம்ரான் கான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு சட்ட விதிமுறை மீறல், அரசு தடையை மீறி பொது இடத்தில் கூடுதல், போலீஸாரை கடமையை செய்யவிடாமல் தடுத்தது, போலீஸ் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது என பல குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் இம்ரான் கான் மீது சுமத்தப்பட்டுள்ளன.
லாகூர், ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் அவர் மீது 54 வழக்குகள் உள்ளன. அனைத்து வழக்குகளிலும் இருந்தும் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இம்ரான் கானின் சகோதரி நூரின் நியாசி தாக்கல் செய்த மனுவை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் இம்ரான் கான் இப்போது விடுதலையாவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
அரசியல் உள்நோக்கம் கொண்டவை.. இம்ரான் கான் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது ஆதரவாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.