உலகின் முன்னணி சர்வதேச விமான சேவையான எமிரேட்ஸ், இலங்கைக்கு பயணிகளை அதிக அளவில் சேவையாற்ற புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் 2025 ஜனவரி 2ஆம் திகதி முதல் புதிய விமான சேவை அறிமுகமாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் டுபாய் இடையே மேலும் ஒரு கூடுதல் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. EK654/655 என அட்டவணைப்படுத்தப்பட்ட இந்த புதிய சேவை, அதன் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையினூடாக ஒவ்வொரு விமானத்திலும் 360 பயணிகளுக்கான இடங்கள் கிடைக்கும். இது இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக 2025இல் இலங்கை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
மேலதிக சேவைகள், 2025 ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை வாரத்திற்கு ஆறு முறை இயக்கப்படும். EK654 விமானம் டுபாயிலிருந்து (DXB) உள்ளூர் நேரப்படி காலை 10:05 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:00 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடையும். அதேபோல், EK655 விமானம் இரவு 10 மணிக்கு கட்டுநாயக்காவில் இருந்து புறப்பட்டு, டுபாய் விமான நிலையத்தை அடுத்த நாள் அதிகாலை 1:05 மணிக்கு சென்றடையும்.
2025 ஏப்ரல் 1 முதல் புதன்கிழமைகளில் ஏழாவது வாராந்திர சேவையும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் தற்போது கொழும்பு-டுபாய் இடையே தினசரி இரண்டு நேரடி சேவைகளையும், மாலே வழியாக மூன்றாவது சேவையையும் ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றது.
இலங்கைக்கு கூடுதல் சேவைகளை அறிமுகப்படுத்தும் எமிரேட்ஸ், சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளதுடன் புதிய சேவைகள், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதோடு, இரு நாடுகளின் இடையேயான இணைப்புகளையும் மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.