வங்கிகளில் 3 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிலையான வைப்பு உள்ளவர்களும் அஸ்வெசும சமூக நலன் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாகாணத்தில் உள்ள சில நிவாரணப் பயனாளிகள் நிவாரணத் தொகை பெறும் வங்கியிலேயே நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல்களை மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தென் மாகாண காணி ஆணையாளர் சேனக பள்ளிகுருகே வெளிப்படுத்தினார்.
வங்கி மேலாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இது தொடர்பான தகவல்கள் தெரியும். அதனால் அது தொடர்பான தகவல்களை பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் வினவியபோது, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளதால், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக அனைத்து பயனாளிகளின் தகவல்களையும் ஆய்வு செய்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.