4,000 டொன் அளவில் எண்ணையை ஏற்றிச்சென்ற ரஷ்ய கப்பலொன்று நடுக்கடலில் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த கப்பல் கருங்கடலில் சென்றுகொண்டிருக்கும் போது புயலில் சிக்கியதால் உடைந்துள்ளது.
மஸுட் எனப்படும் கனரக எரிபொருள் எண்ணெயை இந்த கப்பல் கொண்டு சென்றுள்ளது. கப்பலில் ஏற்பட்ட பிளவால் தற்போது கடலில் எண்ணெய் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ஊழியர்கள் தற்போது கப்பலில் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இழுவை படகுகள் மற்றும் ஹெலிகொப்டரை உள்ளடக்கிய குழு தற்போது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனினும் ஒரு ஊழியர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே இந்த விபத்துக்கு காரணம் என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த இதேவேளை இந்த எண்ணெய் கப்பல் மிகவும் பழைய கப்பல் எனவும் இதனால் அந்த கப்பலால் புயலை எதிர்கொள்ள முடியாமல் போனதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது