கிளிநொச்சி நகரில் அமைத்துள்ள நினைவுச் சின்னத்தை அகற்றி கலாச்சார மண்டபம் கட்டுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள காணிகள் தொடர்பில் பிரேரணை சமர்ப்பித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
கிளிநொச்சி நகரில் பெரும்பகுதி காணிகளை இராணுவம் வைத்துள்ளது. இலங்கையிலேயே கச்சேரி காணியில் இராணுவம் இருப்பது கிளிநொச்சி கச்சேரியாகதான் இருக்கும்.
நாங்கள் கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கும் இந்த கச்சேரி காணியில் பெரும்பகுதியை இரணுவம் வைத்திருக்கிறது. இவ்வாறு பல காணிகளை இராணுவம் வைத்திருக்கிறது.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதனை விடுமாறு கடந்த காலங்களிலும் பேசினோம். இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
டிப்போ சந்தியில் உள்ள இராணுவ வெற்றி சின்னத்தை அகற்றி கலாச்சார மண்டபத்தை அமையுங்கள். தற்போது பேருந்து நிலையம் அமைத்துள்ள பகுதியில் அமைச்சர் ஒருவரின் நிதி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய கலாச்சார மண்டபம் அமைந்திருந்தது.
குறித்த மண்டபம் யுத்தத்தின் போது இடிக்கப்ட்டது. அவ்வாறான மண்டபம் ஒன்றை குறித்த இடத்தில் அமையுங்கள். கலாச்சார மண்டபம் ஒன்று எமது மாவட்டத்துக்கு தேவை. அந்த இடம் பொருத்தமான இடமுமாககும்.
யுத்த சத்தங்கள் இல்லை. குண்டு சத்தங்கள் இல்லை. இப்போதும் இராணுவம் இந்த பகுதிகளில் தேவையா? இராணுவத்தினரை வெளியேற சொல்லுங்கள் எனவும் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மகாவித்தியாலய காணி தொடர்பாக இராணுவம் குறிப்பிட்ட விடயம் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் வீதியை திறந்து விட்டால் குறித்த முகாம் இரண்டாக பிரியும். இதனால் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முன்னெடுப்புக்கள் நடந்துள்ள நிலைவில் இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடன் தான் பேசுவதாகவும், தீர்வு காண்பதாகவும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார்.