இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது ஆட்சி அமைத்ததின் பின்னர், முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி யாழுக்கு விஜயம் செய்யவுள்ள அவர் . யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். இதன் மூலம் வடமாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் முன்னேற்றப்பட உள்ளன.
இதில் மேலும், தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி சந்திப்பு மேற்கொள்வார். இச்சந்திப்பு, அக்கட்சியின் மைய கொள்கைகள் மற்றும் வடமாநில மக்களுக்கான எதிர்கால திட்டங்களை அறிவிக்கும் முக்கியமான வாய்ப்பாக அமையக்கூடும்.
முந்தைய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பிரச்சாரக் கூட்டங்களுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார் அநுரகுமார. ஆனால், தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி துவங்கிய பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் யாழ் விஜயமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.