யாழ் நீதிமன்றத்தில் சாட்சியாக வந்த நபர் ஒருவர் மீது வாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் தலைமறைவாக இருந்த சந்தேக நபரை, யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே மூன்று பிடியாணைகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கைது தொடர்பாக பொலிஸ் தரப்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.