தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடியவர்களை அரசியல் கைதிகளாகக் கணிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பது இனவாதத்தின் வெளிப்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: "கடந்த வாரம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என முன்னாள் கைதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கையொப்பப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது வெற்றியடைந்ததைக் கவனிக்கக்கூடியதாக இருந்தது."
"இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அரசு சட்டவிரோதமாகக் கொண்டு வந்து, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதன் உதாரணமாகும். இது கொடூரமான, ஜனநாயகத்துக்கு எதிரான சட்டமாகவும் சர்வதேச அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்."
"ஆனால், இந்நிலையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 'அரசியல் கைதிகள்' என யாரும் இல்லை என்று கூறுவது இனவாதத்திற்கான ஆதாரமாகும். இவ்வாறான கருத்துக்கள் தமிழர் சமூகத்துக்குப் பெரும் தாக்கத்தைக் கொடுக்கும்." என அவர் தெரிவித்துள்ளார்.