தமிழர் பகுதிகளில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அந்த பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றிய வெதகெதர, பதுளைக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் மொழியில் திறம்பட பேசக்கூடியவர் என்பதனால், அப்பகுதி மக்கள் அவரை எளிதாக அணுகுவதோடு, சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக குற்றச் செயல்கள் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.
அந்தப் பகுதியில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரியின் இருப்பு பொதுமக்களுக்கு நெருக்கமான முறையில் நீதியும் பாதுகாப்பும் வழங்குவதற்கு வழிவகுத்தது. ஆனால், இந்த திடீர் மாற்றம், அப்பகுதி மக்களிடையே புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழர் பகுதிகளில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என்ற பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. இதற்கான காரணங்களை பொலிஸ் திணைக்களம் வெளிப்படுத்துமா? அல்லது இதுவே ஒரு புதிய நெறியாக அமையுமா? மக்கள் பதில்களை எதிர்பார்த்து கவலையுடன் காத்திருக்கின்றனர்.