ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது, அவர் , "முந்தைய அரசாங்கத்தில் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் இருந்தன. தற்போதைய ஜனாதிபதியும் இதனை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கலாம். அதனால் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரங்குகளே காரணம் என சொல்லும் சூழல் உருவாகியுள்ளது," என்று விமர்சித்தார்.
மின்சாரத் தட்டுப்பாடு – அரசின் தவறு
நாட்டில் தற்போதைய மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு அரசாங்கத்தின் நிர்வாகக் கோளாறு காரணமாகும் என்று அவர் சாடியுள்ளார். நுரைச்சோலை மின் நிலையத்தில் மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்ததால், 900 மெகாவோல்ட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், அரசாங்கம் பொறுப்பை தவிர்த்துக் கொண்டு, அரசியல் விளையாட்டில் மட்டுமே ஈடுபடுகிறது. மின் சக்தி அமைச்சரின் நடவடிக்கைகள் ஒரு நகைச்சுவையாக மாறியுள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கையற்ற நிர்வாகம்
முன்னதாகவே, மின்சார விஷயங்களை பார்வையிடும் பொறியியலாளர்கள், இந்த சிக்கல்களை அமைச்சருக்கு அறிவித்திருந்தனர். இருந்தபோதும், முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், மின்சார விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் ஈடுபடுவது ஒருபுறம், ஆனால் நிர்வாகத்திற்கும் விடயம் முறையாக செய்யப்பட வேண்டும் என்ற அவர், "மக்களின் நலனை கருத்தில் கொள்ளாத எந்த அரசாங்கமும் நீடிக்க முடியாது," என்று தெரிவித்தார்.