விக்கி கௌசல் மற்றும் ரஷ்மிகா மந்தன்னா இணைந்து நடித்துள்ள "சாவா" திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமண் உட்டேகர் இயக்கத்தில் உருவான இந்த வரலாற்று திரைப்படம், மறமன்னன் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிவாஜி சாவந்த் எழுதிய பிரபல மராத்தி நாவல் "சாவா" அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. விக்கி கௌசல் சம்பாஜி மகாராஜாக மாற, ரஷ்மிகா மந்தன்னா அவருடைய துணைவியாக ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்ஷயே கண்ணா, அவ்ரங்கசீப் வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
படம் வெளியான முதல் வார முடிவில் திரையரங்குகளில் பார்ப்பதற்கான பெரும் கூட்டம் காணப்பட்டது. முதல் ஞாயிறு மட்டும் ₹48.5 கோடி வசூலித்த படம், முதல் திங்களன்று ₹24 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் நான்கு நாட்களில் ₹140.50 கோடி வரையிலான மொத்த வசூலை திரட்டியுள்ளது.
சாதனைகளை தொடர்ந்து இத்திரைப்படம் 2025ஆம் ஆண்டின் மிக உயர்ந்த முதல் திங்கள் வசூல் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இந்த சாதனை "ஸ்கை ஃபோர்ஸ்" திரைப்படத்திற்கு இருந்தது, அது முதல் திங்களன்று வெறும் ₹7 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. இந்த வெற்றியால் "சாவா" படம் மேலும் பல சாதனைகளை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் சம்பாஜி மகாராஜாக நடித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த விக்கி கௌசல், "இந்த வேடத்தை ஏற்று நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வின் பெரும் பெருமை. மஹாராஷ்டிரத்தில் எல்லோரும் அறிந்த சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை, இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் குழந்தைகள் அறிய வேண்டும் என்பதே எங்கள் ஒரே நோக்கம்" என்று கூறியுள்ளார்.
"சாவா" திரைப்படம் வரலாற்று கதைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையுமா? வார நாட்களிலும் இப்படம் இந்த வசூல் அதிர்வை தொடருமா? என்பதை எதிர்பார்க்கலாம்!"