முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சட்டவிரோத நில பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
கம்பஹா, மானெல்வத்தவில் உள்ள ஒரு நிலம் முதலில் ஷிரந்தி ராஜபக்சவுக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி , அந்த நிலம் நாகானந்தா பௌத்த மையத்திற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பின்னர் 2023 அக்டோபர் 10ஆம் திகதி, தெஹிவளை பகுதியைச் சேர்ந்த தனிநபருக்குக் குறித்த நிலம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அந்த நிலத்தில் உள்ள கட்டிடத்தின் மின்சாரக் கட்டணத்தை ஒரு மதகுருவே செலுத்தி வருவதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலம் பௌத்த விகாரைக்குத் சொந்தமானதாகக் கூறப்பட்ட நிலையில், விற்பனை மற்றும் மின்சார செலவீனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைக் கொண்டு இது மோசடியாக இருக்கலாம் என கூறியுள்ள அமைச்சர், அதற்கான விசாரணையை மேற்கொள்ள சி.ஐ.டி.யில் முறைப்பாடு அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.