கடலோரப் பாதையில் பயணிக்கும் பேருந்துகளின் சாரதிகளும், நடத்துநர்களும் பயணிகளுக்குக் கொடுக்க வேண்டிய மிகுதிப் பணத்தை மறைத்து வைத்துக் கொண்டு போதைப்பொருள் பழக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளின் மிகுதிப் பணம்
கஞ்சா மற்றும் 'ஐஸ்'ரக போதைப்பொருட்கள் கடலோரப் பகுதிகளில் எளிதாகக் கிடைப்பதாகவும், குறித்த பகுதிகளிலுள்ள சிலர் கஞ்சா மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைப் பேருந்துகள் மற்றும் கடலோரப் பாதையில் இயக்கப்படும் பிற வாகனங்களில் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில நடத்துநர்கள் பயணிகளுக்குக் கொடுக்க வேண்டிய மிகுதிப் பணத்தை மறைத்து வைத்துக் கொண்டு கூடுதல் வருமானம் ஈட்டுவதாகவும், குறித்த பணம் பெரும்பாலும் போதைப்பொருள் பழக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் கெமுனு விஜேரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் கொள்ளுப்பிட்டி, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் களுத்துறை நோக்கிப் பயணிக்கும் கடலோரப் பேருந்துகளுக்கு விநியோகஸ்தர்களால் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
