அளுத்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளில், பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்லும் திட்டத்தின் பின்னணியில் இஷாரா செவ்வந்தி செயல்பட்டதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவர், கெஹல்பத்தர பத்மே எனப்படும் நபர் அளித்த வாக்குறுதியின் பேரில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மே, இஷாராவை “ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவேன்” என உறுதியளித்திருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இஷாரா தனது வாக்குமூலத்தில், சஞ்சீவவின் கொலைக்காக எந்தவிதமான பணத்தையும் பெறவில்லை என்றும், தனது ஒரே கனவு ஐரோப்பிய நாட்டிற்கு செல்வதே எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பத்மே ரூ. 6.5 மில்லியன் தொகையை ஜே.கே. பாய் என்ற நபருக்கு வழங்கி, போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து இஷாராவை ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
அதேவேளை, கெஹல்பத்தர பத்மே சிறுவயதிலிருந்தே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும், அந்த வட்டாரத்திலேயே இஷாரா செவ்வந்தி அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு பேரையும், 90 நாட்கள் விசாரணைக்காக காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில், இஷாராவுக்கு தங்குமிடம் வழங்கியதாக கூறப்படும் மத்துகமப் பகுதியில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய பெண், கொழும்பு குற்றப்பிரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன மற்றும் நிஷாந்த சொய்சா ஆகியோரின் அறிவுறுத்தலின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டி தலைமையில் தொடர்கின்றன.