உலகில் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

Editor
0

உலகில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான கட்டாய காணாமல் போன சம்பவங்கள் இலங்கையிலேயே பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இலங்கை அரசாங்கத்திற்கும் 

 புலிகளுக்கும் இடையேயான போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இலங்கையில் பல தசாப்தகால உள்நாட்டு போரின்போது காணாமல் போனோர் குறித்த அவலங்களை மையப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று  வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1980கள் முதல் குறைந்தது ஒரு இலட்சம் வரையானோர் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்று இருக்கலாம் என சர்வதேச மன்னிப்புச் சபை மதிப்பிட்டு உள்ளது.



உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 20ற்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இந்த கண்டுபிடிப்புகளை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகள் குடும்பங்களுக்கு அர்த்தமுள்ள பதில்களை அரிதாகவே வழங்கியதால் காணாமல் போனவர்களின் உறவுகள் குழப்பத்திலும் துயரத்திலும் மூழ்கியுள்ளனர்.


சமீபத்திய நிகழ்வாக கடந்த நான்கு மாதங்களாக யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியான செம்மணியில் அகழ்வாய்வாளர்கள் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகளை கண்டுபிடித்துள்ளனர். இவற்றுள் புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கியுள்ளன.

அம்பிகா சற்குணநாதனின் கருத்து 

செம்மணி கண்டுபிடிப்பு இலங்கையில் கட்டாயமாக காணாமல் போனவர்கள் குறித்து சர்வதேச விசாரணைகளுக்கான புதிய கோரிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை கூட்டுப் புதைகுழி கண்டுபிடிப்புகள் தோல்வி அடைந்த பொறுப்புக் கூறல் மற்றும் தீர்க்கப்படாத சோகத்தின் கதையை தொடர்வதாக உள்ளது.


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மனிதப் புதைகுழிகளை முறையாக விசாரித்து குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர தேவையான தடயவியல் வழங்கல் மற்றும் சட்ட கட்டமைப்புகள் இலங்கையில் இல்லையென அவுஸ்திரேலிய ஊடகத்துக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.


குவாத்த மாலா மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற பிற நாடுகளில் மனிதப் புதைகுழிகளை அகழ்வு செய்வதிலிருந்து பெறப்பட்ட தடயவியல் மானுடவியலில் நிபுணத்துவத்தை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


குவாத்த மாலாவின் உள்நாட்டு போரில் சுமார் 2 இலட்சம் மாயா பழங்குடி மக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது.

மீனாட்சி கங்குலி வலியுறுத்தல் 

அந்தவகையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பங்கள் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் துன்புறுத்தல் அல்லது பரிதாபங்களுக்கு அஞ்சாமல் செயற்பாட்டில் ஒரு தீவிரமான குரலைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள அவுஸ்திரேலியா இந்த காணாமல் போனோர் விவகாரத்தில் தனது உறவைப் பயன்படுத்தி இலங்கையை சர்வதேச கண்காணிப்பை அனுமதிக்க அழுத்தம் கொடுக்க முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பாகத்தின் ஆசிய துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டி உள்ளார்.


கவனிக்கப்படாத போர்க் குற்றங்கள் எதிர்கால அட்டூழியங்களுக்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கின்றன என்று அவர் எச்சரித்துள்ளார்.


இலங்கையை பொறுப்புக் கூறவைப்பது கட்டாயமாகும். எந்த ஒரு நாடும் இதுபோன்ற மனித உரிமை மீறல்களில் இருந்து தப்பிக்க முடியாது என்ற செய்தியை உலக சமூகத்திற்கு அனுப்பும் என்றும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top