யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை , தாயின் கண் முன் நிர்வாணமாக்கி , சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 11 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பல தடவைகள் முயன்ற போதிலும் வடமாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் காரணமாக கைது செய்ய முடியாது பொலிஸார் திண்டாடி வந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தேக நபர் பார்வையிட வந்த வேளை பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த பிரதான சந்தேகநபருக்கும் வடமாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்பட்டமையால் , சந்தேகநபரை கைது செய்வதற்கு அதிகாரிகள் தடையேற்றப்படுத்தி வந்தனர் எனவும்,
கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்று சிவில் உடையில், தனியார் ஒருவரின் முச்சக்கர வண்டியில் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸ் குழு சென்ற வேளை சந்தேக நபர் தப்பி சென்றிருந்த நிலையில்,
தனியாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் சிவில் உடையில் பொலிஸார் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் நடாத்தி பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பின்னணி இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
