காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது.
வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன.
இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை.
போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையினர் நுழைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. இதையடுத்து, தங்களின் வலுவான பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் இணைந்ததால், இஸ்ரேலிய படையினர் பலமுறை திரும்பி வந்துள்ளனர்.
காஸாவிலிருந்து செய்தி நிறுவனங்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. புதன்கிழமையன்று, பிபிசியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட சிலரை காஸா முனையில் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது.
குறுகிய நேரம் நீடித்த இந்த பயணம் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, இதில் பாலத்தீனர்களையோ அல்லது காஸாவின் மற்ற பகுதிகளையோ அணுக முடியவில்லை.
செய்திகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அவை ராணுவ அதிகாரிகளால் பார்க்கும் வகையில் இஸ்ரேலின் ராணுவ தணிக்கை சட்டங்கள் உள்ளன. எனினும் இந்த செய்தியாக்கம் மீதான தனது கட்டுப்பாட்டை பிபிசி உறுதி செய்தது.
காஸா நகரத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷெஜையாவில் காணப்பட்ட இடிபாடுகள்சாம்பல் நிற இடிபாடுகள்
இந்த பகுதியில் பணயக்கைதிகள் சிலரின் உடல்கள் கண்டறியப்பட்டதாக கூறும் லெப்டினன்ட் கர்னல் ஷோஷானி, அதில் இந்த வாரம் ஹமாஸால் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட இடாய் சென்னின் உடலும் அடங்கும் என்றார். மற்ற ஏழு பணயக்கைதிகளின் உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நாங்கள் சென்ற இஸ்ரேலிய ராணுவ தளமானது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதி திட்டத்தின் படி அமைக்கப்பட்ட தற்காலிக எல்லையான மஞ்சள் கோட்டிலிருந்து சில நூறு மீட்டர்களில் அமைந்திருந்தது, இந்த பகுதி காஸாவில் ஹமாஸ் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருந்து இன்னும் இஸ்ரேலிய படைகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளை பிரிக்கிறது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக, அந்த மஞ்சள் கோட்டு பகுதியில் படிப்படியாக தடுப்புகளை அமைத்து இஸ்ரேலிய ராணுவம் குறியிட்டு வருகிறது.
கோட்டின் இந்த பகுதியில் எந்த எல்லைகளும் இன்னும் வரையறுக்கப்படவில்லை எனக்கூறிய இஸ்ரேலிய படையை சேர்ந்த ஒருவர், கட்டடங்களின் சாம்பல் நிற இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிறிய மணல் பகுதியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி சுட்டிக்காட்டினார்.
காஸா நகரத்தில் புதன்கிழமை காணப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர்அடுத்த கட்டம் என்ன?
இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த ஒப்பந்தம் காஸாவை பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. சூழல் எந்தளவுக்கு நிலையற்றதாக உள்ளது என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது, மேலும் போர் நிறுத்தம் ஏற்கெனவே இருமுறை தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையற்ற மோதலில் இருந்து நீடித்த அமைதியை நோக்கி முன்னேற அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அனுப்பிய வரைவு தீர்மானம் பிபிசியால் பார்க்கப்பட்டது, அதில் காஸாவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தவும் ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவும் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தும் படைக்கு (International Stabilisation Force - ISF) இரண்டு ஆண்டு கால அதிகாரத்தை வழங்குகிறது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிக தகவல்கள் தெரியவில்லை: ஹமாஸ் ஆயுதக் குறைப்புக்கு முன்னதாக காஸாவைப் பாதுகாக்க எந்த நாடுகள் படைகளை அனுப்பும், இஸ்ரேலிய படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் அல்லது காஸாவின் புதிய தொழில்நுட்ப நிர்வாகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து காஸாவை மத்திய கிழக்கு மையமாக கட்டமைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையை அதிபர் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். காஸா இன்று இருக்கும் சூழலில் அந்த நோக்கம் வெகு தொலைவில் உள்ளது.
சண்டையை யார் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது மட்டுமல்லாமல், காஸா இஸ்ரேலால் பெரும்பாலும் அழிக்கப்பட்டு டிரம்பால் முதலீடாகக் கருதப்படும் நிலையில், காஸா மக்கள் தங்கள் நகரங்கள் மற்றும் நிலங்களின் மீது எதிர்காலத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துவார்கள் என்பதும் கேள்வியாக உள்ளது.




