சட்ட அறியாமையா, பேராசையா? ; லண்டனில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அபாயம்!

Editor
0

 கடந்த வாரம் இலண்டனில், இலங்கைத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் (Off Licence) பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை, புலம்பெயர் தமிழ் வணிக சமூகத்தில் மீண்டும் ஒரு தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது.

வதிவிட உரிமையற்ற ஒருவரை பணிக்கு அமர்த்திய குற்றச்சாட்டின் கீழ், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு 45,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இத்தகைய கைதுகளும் அபராதங்களும் இடைக்கிடையே பதிவாகியிருந்தாலும், தற்போதைய சூழலில் பிரித்தானிய அரசின் குடிவரவு சட்ட அமுலாக்கம் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, சட்டவிரோதப் பணியமர்த்தலுக்கான அபராதத் தொகை, முன்பு 10,000 பவுண்டுகளாக இருந்த நிலையில், தற்போது 45,000 பவுண்டுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


சட்ட நெருக்கடிகளும், கடுமையான பொருளாதார விளைவுகளும் தெளிவாக அறிந்திருந்தும், சில தமிழ் வணிகர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக வதிவிட உரிமையற்றவர்களை பணிக்கு அமர்த்துவது ஏன் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.


இதற்கான காரணங்களில், “தங்களைச் சட்டம் எட்டாது” அல்லது “தப்பித்துக் கொள்ளலாம்” என்ற ஒரு தவறான தன்னம்பிக்கை முக்கிய இடம் பெறுவதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பல ஆண்டுகளாகப் பிடிபடாமல் வணிகம் செய்த அனுபவம், ஒரு பொய்யான பாதுகாப்பு உணர்வை உருவாக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


மேலும், “எந்த சிக்கல் வந்தால் பணத்தாலும் சமாளிக்கலாம்” என்ற தவறான பொருளாதார கண்ணோட்டமும், குறுகிய கால இலாப நோக்கமும், இத்தகைய தவறான முடிவுகளுக்குத் தூண்டுதலாக அமையக்கூடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.


45,000 பவுண்டுகள் அபராதம் என்பது இந்த பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே. சட்டவிரோதப் பணியமர்த்தல் உறுதிசெய்யப்பட்டால், குறித்த வணிக நிலையத்தின் மதுபான விற்பனை உரிமம் உள்ளூர் சபையால் ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது. இது, Off Licence வணிகத்தின் முழு வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக மாற்றக்கூடியது.


அத்துடன், இத்தகைய சட்ட நடவடிக்கைகளால் ஏற்படும் கடுமையான மன அழுத்தம், உரிமையாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் உடல் மற்றும் மன ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலைக்கும் தள்ளக்கூடும்.


இந்த வகை சம்பவங்கள், ஒரு தனிநபரின் பிரச்சினையாக மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் நற்பெயரையும் பாதிக்கும் சமூகப் பிரச்சினையாக மாறி வருகிறது.

''இலங்கைத் தமிழருக்குச் சொந்தமான கடை உரிமையாளர் கைது” என்ற தலைப்புகள் பிரித்தானிய ஊடகங்களில் தொடர்ந்து வெளிவரும்போது, பல ஆண்டுகளாகக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட சமூக நம்பகத்தன்மை சிதைவடையும் அபாயம் உள்ளதாக சமூக பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர்.

மேற்கண்ட காரணிகளையும் விளைவுகளையும் கருத்தில் கொள்ளும் போது, இது வெறும் சட்ட அறியாமை அல்ல; உடனடி இலாபத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆபத்தான மனநிலையின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

உடனடி லாபத்திற்காக, தனிநபரின் வாழ்வாதாரத்தையும், குடும்ப நிம்மதியையும், சமூகத்தின் நற்பெயரையும் பணயம் வைக்கும் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதே சமூகத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top